Friday, October 31, 2014

இரவு வேட்டை

பல இரவுகளில் நான் சந்தித்திருக்கிறேன்
 அந்த மிருகத்தை
 அனகொண்டாவின் வீரியமும்
 காட்ஸில்லாவின் தினவுமாய் திரியும்
 படுக்கை விரிப்பில்

 அதனுடைய அவசரமெல்லாம்
 ஆப்பிள் கடிப்பதிலும்
அதனுடைய அவஸ்தையெல்லாம்
தாமரைப் பூவுக்குள் நுழைவதும் தான்
இம்மியும் எண்ணியது இல்லை மனக் காயங்களை

தோழிகளும் சொல்லியிருக்கிறார்கள்
இதுபோல் ஒரு மிருகத்தைப் பற்றி
ஓநாய்க்கு அஞ்சும் மான்குட்டிகளாய்
ஓடி ஒளிந்தாலும் அதன் கூரியப் பற்களில்
 சிக்கிச் சிதலமான கதைகளை

மெல்ல அடியெடுத்து வைக்கும் செங்கிஸ்கான் குதிரையாய்
எருமை புகுந்த ஆம்பல் தடாகம் ஆகும் நம் உடம்பு
தவிர்த்தல் இயலாமல் வசப்பட்டு வசப்பட்டு
நம்மை இழந்த பின்
விடியலில் மிச்சம் இருப்பது என்னவோ
நண்டூர்ந்து சென்றது போல நகக் குறிகள் மட்டுமே

 சூரியனில் மாறிவிடும் அதன் சுபாவம்
 சுடச் சுடச் கேட்கும் தேநீர்
 நிர்வாணமற்ற வசீகர ஆடைகள் பரிந்துரைக்கும்
 கைப்பையும் அலுவலகக் கோப்புகளுமாய்
 காசுமரமாகிவிட வேண்டும் இரவில் பூத்தக் காம மரம்

ஒவ்வொரு கதவுக்குள்ளும் திரியும்
 மிருகத்தின் முதுகில் குத்தப்பட்டுள்ள
முத்திரை என்னவோ  ”பெண்கள் ஜாக்கிரதை”
                                (நன்றி - உயிர் எழுத்து)

ஜெயதேவன்
ஒரு பறவையின் முதலிரவு

ஒரு பறவையின் முதலிரவு எப்படி இருக்கும்
 புரோகிதர் உண்டா பறவையின் ஜாதியில்
நாள் குறித்து சாந்தி முகூர்த்தம் பண்ண

 மார்பினை உறுத்தும் மஞ்சள் கயிறு இராது
ஏனெனில் அது மானுடற்கான காதல் விலங்கு
தோழன் அல்லது தோழி இருப்பார்களா
காமச் சீண்டலில் காட்டைக் கலகலப்பாக்க

 எதனால் அமைந்திருக்கும் கட்டில்
பழங்கள் சலித்திருக்கும்
எதை உண்டு சரிகட்டி வெல்லும்

வாயில் மட்டுமா
இல்லையே

கட்டாயம் பெண் பறவை சூடாது மல்லிகை
ஆடைகள் கசங்க வாய்ப்பு இல்லை
புறமிருந்து புணர்வதால்

 வியர்க்குமா? வியர்வைதான் நாறுமா?
காமத்திலிருந்து காதலுக்கு வருமா
 காதலிலிருந்து காமத்திற்குப் போகுமா?

 நிச்சயம் ஏமாற்றம் வந்திருக்காது
அடுத்த தேதி குறிக்காது விலகும் அதன் உடல்
பின் அவ்வப் போது தென்படும்
எவனோ எவளோ தான் இரண்டாம் மூன்றாம் இரவுகளுக்கு
ஏனெனில் யாருக்கு யாரும் கணவன் இல்லை
யாருக்கும் யாரும் மனைவி இல்லை
(நன்றி - உயிர் எழுத்து )

ஜெயதேவன்

Thursday, October 30, 2014

கண்ணாடி நகரம்

எத்தனை மாலைப் பொழுதுகளை
 சாப்பிட்டு ஜீரணிக்க முடியும்
 என்னாலும் என் கிராமத்துக் குளத்து மீன்களாலும்
கண்ணாடித் தொட்டியின் பொன் மீன்களும்
இனிப்பாய்த் தான் இருக்கின்றன
அடுக்குமாடிக் குடியிருப்பில்

ஆடுகளுடன் நாமும்
அசைபோட்டு சலித்து விடுகிறது
வெயில் நேரத்து வேப்பமர நிழல்கூட
ஹுண்டாய்” குளிர் சாதனம் சலிப்பு தரவில்லை
“மல்லிகா ஷெராவத்” மாதிரி

ஆற்று நீரள்ளிப் பருகும் சுகம்
அலாதியானதுதான்
 வெட்டி வேரிட்ட குடத்து நீரும் கூட
 அக்குவாபினாவின் பாட்டிலில் கூட
தெரியத்தானே செய்கிறது
 சிறுவாணியும் தாமிரபரணியும்

 சலித்தெடுத்த வயல் வெளிக் காற்றில்
 ‘கண்ணதாசன்’ தொட்டுவிட்டுப் போகலாம்
 கிழக்குக் கடற்கரையின் மென்காற்றும் கூட
“மைக்கேல் ஜாக்ஸனின்’ பாதங்கள் போலத்தான்

புழுதித் தரைகளும்
 கட்டைவண்டித் தடங்களும்
என் பாட்டியின் சுருக்குப் பையை
நினைவூட்டும்

தங்க நாற்கரச் சாலையில் தெரிகிறது
ஷெர்ரி பழத்தின் வளவளப்பும்
 உலகைச் சுருட்டி வைத்த முட்டை ஓடும்

கரிசல் காட்டின் பாதவெடிப்புகளை விட
மோசமில்லை
 பிளீச்  செய்யப்பட்ட நாகரீக முகங்களும்
பௌடர் பூசிய நகர வீடுகளும்
( நன்றிகணையாழி)

 ஜெயதேவன்
அடையாளம்

எனக்குப் பெயர் வைத்தவன் இப்போது இல்லை
இனி அவன் வந்தாலும் அவன் பேர் அதுவாக இராது

கூழாங்கல் பெயர் எனக்குத் தெரியும்
கூழாங்கல்லுக்கு என் பெயர் தெரியாது
 அதற்குக் கல்லென்பதே தெரியாது
 மணத்தை வைத்து மல்லிகை என்கிறோம்
இனிப்பை வைத்துத் தேன் என்கிறோம்
நமக்கான புலன்களில் இருக்கிறது
அவைகளின் பெயர் தெரிவு
 ஒரு நாய்க்கு
மணக்காது மல்லிகை

 ஆதிக்கருப்பன் பெயர் ஆதாம் என்பதோ
ஆதிக் கருப்பிப் பெயர் ஏவாள் என்பதோ
கடவுளிட்ட பேர் அல்ல

மீன் என்றால் துள்ளலும் துடிப்புமாய்
கடல் என்றதும் ... என்ற ஒலியுடன்
அரூபத்திலிருந்து எழும் ரூபப் பிரதி

ஹிட்லர் என்றால் அகங்காரம்
புத்தன் என்றால் ஞானம்
குணம் குறித்த குறியீடுகள் பெயர்

ஒரு பந்தும் நீயும்
ஒன்று என்பான் அத்வைதி
நானே பரப்பிரம்மம் என்று சொல்லி
எங்ஙனம் சேர்ப்பது பள்ளியில்?
நான் பிரபஞ்சம் என்று கூறி
எவ்விதம் பெறுவது பயணச்சீட்டு?

பெயர் என்பது அடையாளம்
 நான் என்பது
 பெயர் கடந்த வெளி

(நன்றி - இனிய உதயம்)

ஜெயதேவன்