அடையாளம்
எனக்குப்
பெயர் வைத்தவன் இப்போது இல்லை
இனி அவன் வந்தாலும் அவன்
பேர் அதுவாக இராது
கூழாங்கல்
பெயர் எனக்குத் தெரியும்
கூழாங்கல்லுக்கு
என் பெயர் தெரியாது
அதற்குக் கல்லென்பதே தெரியாது
மணத்தை வைத்து மல்லிகை
என்கிறோம்
இனிப்பை
வைத்துத் தேன் என்கிறோம்
நமக்கான
புலன்களில் இருக்கிறது
அவைகளின்
பெயர் தெரிவு
ஒரு நாய்க்கு
மணக்காது
மல்லிகை
ஆதிக்கருப்பன் பெயர் ஆதாம் என்பதோ
ஆதிக் கருப்பிப் பெயர் ஏவாள் என்பதோ
கடவுளிட்ட
பேர் அல்ல
மீன் என்றால் துள்ளலும் துடிப்புமாய்
கடல் என்றதும் ஓ... என்ற ஒலியுடன்
அரூபத்திலிருந்து
எழும் ரூபப் பிரதி
ஹிட்லர்
என்றால் அகங்காரம்
புத்தன்
என்றால் ஞானம்
குணம் குறித்த குறியீடுகள் பெயர்
ஒரு பந்தும் நீயும்
ஒன்று என்பான் அத்வைதி
நானே பரப்பிரம்மம் என்று சொல்லி
எங்ஙனம்
சேர்ப்பது பள்ளியில்?
நான் பிரபஞ்சம் என்று கூறி
எவ்விதம்
பெறுவது பயணச்சீட்டு?
பெயர் என்பது அடையாளம்
நான் என்பது
பெயர் கடந்த வெளி
(நன்றி - இனிய உதயம்)
ஜெயதேவன்
No comments:
Post a Comment